Friday, November 19, 2010

10 - சகா - புதுமுகங்களுடன் ஒரு படம்

நண்பர் திவ்வியராஜன் தான் தயாரிக்கப்போகும் ஒரு திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரம் ஒன்றில் நடிக்கச்சொன்னார். ஆணால் படப்பிடிப்பு தொடங்கியபின்னர், எனது பாத்திரம் கொஞசம் கொஞசமாக விரிவடைந்தது.  தாத்தா பாத்திரம்.. விதவையான மகள். செல்லமான பேரன்.
என்று வாழ்க்கை போகிறது.
வன்முறையினால் பேரன் அநியாயமாக பலி கொள்ளப்பட, தாத்தாவின் கண்ணீர் வாக்குமூலத்துடன் படம் முடிவடைகிறது.

என்னுடன் பாரத் ஜெயம், கீர்த்தனன், தர்ஷன் , நவம், கனகலிங்கம், ஆர்.இராஜ்ரட்னம், ஸ்ரீமுருகன் ஆகியோர் நடித்தார்கள்.

கதை,வசன்ம் இயக்கம் வி.திவ்வியராஜன், படப்பிடிப்பு - ஜீவன் ஜெயராம். தயாரிப்பு - கவின் கலாலயா.

கனடாவிலும், இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் திரையிடப்படது.



Tuesday, November 16, 2010

9 - மென்மையான வைரங்கள் - ஒரு பெண்ணின் கதை

கனடாவில் பெண்கள் வீட்டிலும் வெளியிலும் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்களை இனம் கண்டு, அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ன என்று உணர்த்தும் வகையில் எங்கள் சமூகத்திற்காக ஒரு திரைப்படம் தயாரிப்பதற்கான அரசாங்க உதவியுடன் தயாரிக்கப்பட்ட திரைப்படம் இது.

மெல்லியலார் என்று கருதப்படும் ஒரு பெண் வைரமாக வலுவுள்ளவளாக மாறுவதை குறிக்கும் தலைப்புத்தான் - மென்மையான வைரங்கள்.
இதற்கான மூலக்கதையை எஸ்.எஸ்.அச்சுதன் எழுதுவதென்று முடிவாகியது. நானும் அவருமாக முழுக்கதையையும் உருவாக்கியபின்னர், அதற்கான திரைக்கதை வசனங்களை எழுத ஆரம்பித்தேன்.

இதில் நடிகர்களாக ஆனந்தி ஸ்ரீதாஸ், எஸ்.மதிவாசன், அனுஷா ஜெயலிங்கம், எஸ்.ரி.செந்தில்நாதன், துஷி ஞானப்பிரகாசம், ராதிகா போன்றோரை முக்கிய பாத்திரங்களுக்கு தெரிவு செய்தோம். ரவி அச்சுதன் தான் படப்பிடிப்பாளர்.

முக்கியகதைக்கு வெளியே பல கிளைக்கதைகள் உருவாகியதினால், நிறையவே கலைஞர்கள் சேர்த்துக்கொளளப்பட வேண்டி வந்தது. படப்பிடிப்பும்  தொடர்ந்துகொண்டே போனது. படப்பிடிப்பாளருக்கு வேறு வேலைகள் வந்தன. எப்படியோ காலதாமதமாகியது.

படத்தில் ஒரு திருமணக்காட்சி வருகிறது. அங்கு க்தாநாயகி தன் பழைய காதலணை எதிர்பாராமல் சந்திக்க நேரிடுகிறது. கதையின் முக்கிய திருப்பமே அதுதான். எனக்கு மிகவும் பிடித்த காட்சி. இந்தக்காட்சி படம்பிடிக்கப்பட்ட பின்னர்தான், இந்தியப்பெண் எழுத்தாளர் ஒருவரின் (வாசந்தி? அல்லது அனுராதா ரமணன்?) சிறுகதை ஒன்றில் (ஆனந்தவிகடனில்) எனது வரிகள் வர்ணனை, சம்பவம் அப்ப்டியே வருவதை வாசித்தேன். நிச்சயமாக நான் எழுதியதை அவரோ, அவர் எழுதியதை நானோ முன்னதாக அறிந்திருக்கும் வாய்ப்பு இருக்கவில்லை.. ஆனால் இது எப்படி......

அப்போது கனடாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த அளவெட்டி என்.கே.பதமநாதன் (நாதஸ்வரம்) -  நாச்சிமார் கோவிலடி கணேச்பிள்ளை (தவில்) கச்சேரியையும் இப்படத்தில் இணைத்துக்கொண்டது, சந்தோசமான ஒரு திருப்பம்.

ஒருமாதிரி படப்பிடிப்பு முடிந்ததும், படத்தொகுப்பு (எடிட்டிங்) பல கைகள் மாறின. இனி வராது,..வரவே வராது என்று நினத்தபின்னர், எப்படியோ அரும்பாடுபட்டு, திரை அரங்கு வரை கொண்டுவந்து விட்டேன்.

இரண்டு வார இறுதிக்காலத்தில் திரையரங்கில் ஓரளவு கூட்டத்துடன் ஓடியது. அவ்வளவுதான்.


Monday, November 15, 2010

8 - எங்கோ தொலைவில் - திரைப்படமாகிய சிறுகதை


89ல் நான் பிரான்ஸ், சுவிஸ் போன்ற நாடுகளுக்கு போய்விட்டு இலங்கை திரும்பிய பின்னர், அந்த நினைவுகளை அடிப்படையாக வைத்து, "எங்கோ தொலைவில்" என்ற சிறுகதையை எழுதி அது வீரகேசரியில் பிரசுரமானது.

1995ய்; கனடா வந்ததின் பின்னர், வின்னிபெக் ந்கருக்கு சென்றபொழுது, அங்குள்ள சிலர் நாடகம் ஒன்று எழுதிதரச்சொல்லி கேட்டபொழுது, அந்தச்சிறுகதையை நாடகமாக்கிக் கொடுத்தேன். தர்செயலாக அமைந்ததோ என்னவோ, அந்த நாடகத்தில் நடித்தவர்களில் என்னைத்தவிர மற்ற எல்லோருமே மருத்துவர்கள்.

தொடர்ந்து வன்கூவரிலும், அங்குள்ள இளஞர்கள் இதே நாடகத்தை என்னோடு சேர்ந்து நடித்தார்கள்.

ரொர்ன்ரோ திரும்பியபின் உலகப் பண்பாட்டு மகநாட்டுக்கான கலைநிகழ்ச்சிகளில் ஒரு நாடகம் இடம்பெற வேண்டுமென்றவுடன் - மீண்டும் அதே நாடகம். ஆனால் நீண்ட கல ஒத்திகையுடன் திறமையான க்லைஞர்கள் என்னோடு இணந்து கொண்டார்கள். எஸ்.ரி.செந்தில்நாதன்,எஸ்.மதிவாசன், எஸ்.பாலச்சந்திரன், கமல் பாரதி, சுப்புலக்ஷ்மி காசிநாதன், ஆர்.காசிநாதன் என்று பலரும் நடித்து பாராட்டு பெற்ரர்கள்.

அந்த உற்சாகத்தில் கனேடியத் தமிழ் கலைஞர்கள் கழகம் - பாரதி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாக 'எங்கோ தொலைவில்' திரைப்படத்தை வீடியோ படமாக தயாரிக்க முற்பட்டார்கள். நாடகத்தில் நடித்தவர்களோடு, துஷி ஞானப்பிரகாசம், மேகலா துரைராஜா, வி.சத்தியவரதன், பாலசிங்கம் சபேஸ், சித்திரா பீல்க்ஸ், ராதிகா என்று பலரும் இணந்து நடித்தார்கள்.




திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகியவற்றை நான் கவனித்துக்கொள்ள எம்.ஜெயக்குமார் (கண்ணன்) ஒளிப்பதிவு செய்தார். இசை பவதாரிணி மதிவாசன். தயாரிப்பு- எஸ்.மதிவாசன் என்று பங்களிப்பு வழங்கப்பட்டது.

இத்திரைப்படம் பலதடவைகள், ரொரன்ரோ, ஒட்டாவா, வின்னிபெக் என்று பல இடங்களிலும் திரையிடப்பட்டு. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வரவேற்பை பெற்றது.

க்னடாவில் இருக்கும் அண்ணனுக்கு ஊரில் இருக்கும் தங்கை கடிதம் எழுதும் கட்டம், ப்லரையும் கண்கலங்க வைத்தது. ரிவிஐ தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டபோதும் இது முக்கியமாகச் சொல்லப்பட்டது.

Sunday, November 14, 2010

7 - உயிரே உயிரே - ஆங்கிலச்சிறுகதை படமானது


1902ம் ஆண்டில் W.W.Jacobs என்பவரால் எழுதப்பட்ட சிறுகதை Monkey;s Paw( குரங்கு நகம்) என்பதாகும். இது பின்னர் ஓரங்க நாடகமாகவும், பல தடவை திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டது.

ஒரு சிறிய அன்பான குடும்பம். தந்தை, தாய், ஒரு அன்பான மகன். மூவர் மாத்திரமே. தொலைதூரமெல்லம் போய்வரும் ஒரு நண்பர், இந்தியாவில் கிடைத்ததென்று ஒரு குரங்கு நகத்தை அவர்களுக்கு கொடுக்கிறார். மூன்று விருப்பங்களைக் கேட்டால் அது தரும் என்று சொல்கிறார். மனைவி பணத்தேவை வர பணம் கிடைக்கவேண்டுமென்று கேட்கிறார். பணம் அப்படியே கிடைக்கிறது. ஆனால் பெரிய இழப்போடுதான் அது வருகிறது. அவர்களின் மகன் வேலை செய்யும் தொழிற்சாலையில் விபத்தில் இறந்துவிட நட்ட ஈடாக கிடைக்கிறது. அடுத்த விருப்பமாக, மகன் மீண்டும் திரும்பி வரவேண்டுமென்று தாய் கேட்கிறார்.. உடனே கதவு தட்டிக் கேட்கிறது. இறந்து 10 நாட்களாகியபின்னர், அடக்கம் செய்தபின்னர், விபத்தினால் சிதைந்து போன மகனின் கோலம் எப்படியிருக்கும் என்று தெரிந்த தகப்பன், நகத்தை அவசரமாக எடுத்து "நீ போ" என்கிறான். சத்தம் நின்றுவிடுகிரது.

இந்த ஓரங்க ஆங்கில நாடகநூல், நான் கொழும்பில் இருக்கும்போது, எனக்கு கிடைத்தது. வாசித்தபோது இதை தமிழில் மேடையேற்றலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. நண்பருக்கு இரவல் கொடுத்து அது திரும்பி வராமல் போக அதை மறந்தும் விட்டேன்.

கனடா வந்ததின் பின்னர் இந்த கதை எனக்கு சொல்லப்பட்டது. அதாவது இதை திரைப்படமாக்கப் போவதாகவும், இதன் திரைக்கதையை எழுதுவதோடு, கதையின் ஒரு முக்கியமான பாத்திரமான தந்தையாக நடிக்கவேண்டுமென்றும் கேட்டார்கள்.

எனக்கு நன்றாகத் தெரிந்த கதை. நான்கு பாத்திரங்களுடன் மேலும் பாத்திரங்களைச் சேர்த்து, தமிழ்மயப்படுத்தி திரைக்கதை, வசனத்தை எழுதினேன்.






ஜனகன் பிக்ஷர்ஸ் சிறீமுருகன் என்பவர் தயாரிப்பாளர். ரவி அச்சுதன் இயக்கம், படப்பிடிப்பு என்பவற்றை பார்த்துக்கொள்ள, படத்தில் எனது மனைவியாக ஆனந்தி சிறீதாஸ் (சசிதரன்) மகனாக ரமேஷ் புரட்சிதாசன், எங்கள் குடும்ப நண்பனாக சிறீமுருகன், குடும்ப மருத்துவராக கீதவாணி ராஜ்குமார் என்று முக்கியமான பாத்திரங்களில் நடிக்க படப்பிடிப்பு ஆரம்பமாகியது.











மிசிசாகாவில் ஒரு நண்பர் வீட்டில்தான் பெரும்பான்மையான காட்சிகள் படமாகின. அதே வீட்டுக்காரரின் தொழில் நிறுவனத்திலும், வெலெஸ்லி மருத்துவமனையிலும் முக்கிய காட்சிகள் சில எடுக்கப்பட்டன.

படப்பிடிப்பு முடிவடைந்தபின்னர், படத்தொகுப்பு, இசை சேர்த்தல், குரல் கொடுத்தல் போன்ற வேலகள் ஆர்.கே.வி.எம்.குமாரின் கவனிப்பில் நடந்து முடிய, படம் வெளியிட தயாராகி விட்டது.

படம் வெளியாகிய முதள் நாள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரங்கு நிறைந்த காட்சி என்பது கனடா தமிழ்ப் படத்திற்கு அதுவே முதல்தடவை. எதுவாக இருந்தாலும், பார்வையாளர்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியும்வரை, நானும், ஆனந்தியும் Projection Room உள்லே இருந்து கொண்டோம். படம் முடிவடைந்து பலத்த கரகோஷம் எழுப்பபட தான் வெளியே வந்தோம்.

கதையின் தன்மையையிட்டு சர்ச்சைகள் இருந்தாலும் எங்கள் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. முக்கியமாக ஆனந்தி சிறப்பாக நடித்திருந்தார். நல்ல விமர்சனங்கள் வந்தன. மீண்டும் பல தடவைகள் திரையிடப்பட்டது.

நீண்ட காலத்திற்கு பின்னர் ஒரு வீட்டிற்கு போனபொழுது, அங்கிருந்த ஒரு முதியபெண் மகனை இழ்ந்து தகப்பனும், தாயும் அழுத காட்சியின் பாதிப்பு தனக்கு இப்போழுதும் இருக்கிறது, என்று நினவு மீட்டினார். மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

கனடாவில் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அடிகோலியது உயிரே உயிரேதான். அதற்காக தயாரிப்பாளரை பாராட்டலாம்.

Saturday, November 13, 2010

6- Blendings - இலங்கையில் ஆங்கிலத் திரைப்படம்

வாடைக்காற்று திரைப்படத்தின் உதவி இயக்குனராக நானும், உதவி எடிட்டராக (படத்தொகுப்பாளர்) எல்மோ ஹலிடேயும் ப்ணியாற்றிய காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.

தமிழ் திரைப்படம் என்று யாராவது சொன்னால் போதும். என்னிடம் அழைத்துக்கொண்டு வந்துவிடுவார். உதாரணமாக் ஸ்வர்ணமகால் என்ற நகைக்கடைகாரார்கள் தமிழ்த் திரைபடங்களை இலங்கையில் திரையிட்ட காலம். சரத்குமார் அப்பாவும், மகனுமாக நடித்த "நாட்டாமை" திரைப்படத்தை நானும் ஹலிடேயும் "எடிட்" பண்ணியப பின்னர்தான் திரையிட்டார்கள்.

திடீர், திடீரென்று இப்படி எதாவது வேலையோடு (வருமானத்துடன்)என்னிடம் வருவார் என் நண்பர்.



இப்படித்தான் ஒருமுறை. சிங்களத்தொலைக்காட்சி நாடகங்கள் இயக்கும் மோஹன் (முகமட்) நியாஸ் என்பவருடன் என் வீட்டிற்கு, எல்மோ ஹலிடே வந்தார். ஒரு ஆங்கிலப்படம் எடுக்கப்போவதாகவும், அதில் தமிழ் காட்சிகளும் இருப்பதாகவும், என்னை உதவி இயக்குனராகவும், நடிகராகவும் பங்காற்ற வேண்டுமென்று சொன்னார்கள்.

திரைப்படத்தை தயாரித்தவர், ஜோன் அடம்ஸ், கொழும்பில் சர்வதேசப்பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவிருந்தவர். இவரே திரைக்கதையை எழுதியதோடு, முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.



ஜோன் அடம்ஸ் (கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர்)

கதை 150 ஆண்டுகளுக்கு முன்ன்ர் இலங்கையில் கோப்பிசெய்கை குறைந்துபோக, அதற்குப்பதிலாக, தேயிலை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டது. தேயிலையின் அறிமுகத்தோடு, இந்தியாவிலிருந்து தமிழ்த் தொழிலாளர்களும் வரவழைக்கப்பட்டார்கள். அதேபோல அக்கால பிரிட்டிஷ் ஆட்சியில், இங்கிலாந்திலிருந்து வெள்ளைக்கார துரைகள் நிர்வாகத்திற்கு என்று வந்தார்கள். தோட்டங்களுக்கு வெளியே வாழும் சிங்கள மக்களுக்கு, தேயிலை செய்கைக்காக ஆட்சிக்காரர்களினால் தங்கள் விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்டுவதாக கோபம் இருந்தது.இந்த மூன்று சமூகங்களினதும் அக்கால வாழ்க்கை நிலையை சித்தரித்து உருவாகியது இத்திரைப்படம்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பநாள் நுகேகொடையில் உள்ள ஒரு இணைத்தயாரிப்பாளரின் வீட்டில் விமரிசையாக கொண்டாட்ப்பட்டது.

உதவி இயக்குனருக்கான முன்தொகையை இணத்தயாரிப்பாளரிடமிருந்து பெறுகிறேன்.




கண்டிக்கு அண்மித்தான பகுதிகளிலும், தேயிலைத்தோட்டங்களிலும்(Muruthalawa Franion Estate), காலி கோட்டையின் உள்ளும், பாணந்துறையிலும் படப்பிடிப்பு நடந்தது.

இந்தப்படத்தில் நான் நடித்த முதலாவது காட்சி, ஒரு மலை உச்சியில் இருக்கும் பங்களாவிற்கு ஓடிப்போய், யானைகள் தோட்டத்திற்குள் வந்துவிட்டன என்று தோட்டத்துரைக்கு சொல்லவேண்டும். 10, 15 தடவக்ளுக்கு மேல் அந்தக்காட்சியை திருப்பி திருப்பி எடுத்தார்கள். நான் மட்டும் காரணமல்ல். என்னோடு அந்தக்க்காட்சியில் நடித்த ஜோன் அடம்ஸ் (தயாரிப்பாளர்-கதாநாயகன்) விட்ட தவறுகளும்தான். காரணம் எதுவாக இருந்தாலும் பலதடவை, கீழிருந்து மேலே களைக்க,களைக்க ஓடியது நான் தான்.




நானும் ஜோன் அடம்ஸ்ம்

மலை உச்சியில் உள்ள பங்களாவும் அங்கிருந்து பார்க்கும்போது கீழே தெரியும் பச்சை பசேலென்ற தேயிலைத் தோட்டங்களும், இடை இடையே செங்குத்தாக உயர்ந்து நிற்கும் மரங்களும் - அற்புதமான காட்சி. அதுவும் அதிகாலை வேளைகளிலேயே படப்பிடிப்புக்கு போகும் சந்தர்ப்பங்களில் அந்த ரம்மியமான காட்சியை பார்த்து ரசித்துக்கொண்டேயிருப்பேன்.

உதவி இயக்குனராக வாடக்காற்று திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு இப்படத்தில் உதவியாக இருந்தது. அடுத்தநாள் என்னென்ன காட்சிகள் எங்கே படமாக்கப்படும், யார் யார் நடிக்கிறார்கள் என்று முதல் நாளே தீர்மானிக்கப்பட்டபின், குறித்துக்கொள்வேன். அடுத்த நாள் அதிகாலையிலேயே அந்த நடிகர்களை மாத்திரம் எழும்பச்செய்து, மேககப் போட்டுக்கொள்ளச்செய்வேன். பிறகு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு முதல் வாகனத்தில் சென்று காட்சிக்கான எல்லா உபகரணங்களும், பொருட்களும் தயாரா என்று பார்த்துக்கொள்வது என் வேலைதான். இயக்குனரும், நடிகர்களும் வரும்போது எல்லம் தயாராக இருக்கும். இருக்கவேண்டும்.


கதாநாயகி ஜேன் பிளேமிங், எனது மகளாக நடித்த கிகானி


ஆங்கிலப்பாத்திரங்களில்,Jon Adams, Jane Fleming ஆகியோர் நடிக்க சிங்கள்ப்பாத்திரங்களில் பிரபல நடிகை சபீதா பெரெரா, றொஜர் செனெவிரட்ன,சிறில் விக்ரமகே, மெனிக்கே அத்தநாயக்க போன்றோரும், தமிழ்ப் பாத்திரங்களில் நான் முக்கியபாத்திரத்தில் நடிக்க, எஸ்.ராம்தாஸ், மகேஸ்வரி ரத்தினம், எஸ்.சுரேஷ்ராஜா, கந்தையா,மோகன்,மாத்தளை கார்த்திகேசு, மல்லிகா கீர்த்தி போன்றவர்களும் நடித்தார்கள்


சிறில் விக்கிரமகே, மெனிக்கே அத்தநாயக்க, சபீதா பெரெரா


லயம் (லைன்) என்ற குடியிருப்புகளில் வாழும் மலையகத் தொழிலாளர்களின் காட்சிகள் படமாக்கப்ட்டன். அந்நேரத்தில் அவர்களது சோகமயமான வாழ்க்கை தெரிந்தது. அங்கே படப்பிடிப்பு நடக்கும்போது அவர்கள் மிகவும் உதவியாகவும், அன்பாகவும் நடந்து கொண்டார்கள்.


வசனங்கள் ஒத்திகை பார்க்கும் நான் (சாரத்துடன், வெள்ளைதொப்பியில்)






தோட்டத்தொழிலாளர்களில் ஒரு குடும்ப்பத் தலைவன் பாத்திரம் எனக்கு தரப்பட்டது. எனது மனைவியாக மகேஸ்வரி ரத்தினம், மூத்தமகளாக Gihani என்ற புதுமுக சிங்கள நடிகையும், மகனாக செந்தூரனும் நடித்தார்கள்.

ஒரு முக்கியமான காட்சியில், எனது மகள் தோட்டத்தை விட்டு ஊருக்குள் வேலைதேடிப் போகும் வேளையில் ஒவ்வோருவர் அருகில் சென்று விடைபெற்று செல்லும் காட்சியில், ஏறக்குறைய 12 பேர் அங்கங்கே நிறக அவள் செல்வதை கமரா வளைந்து வளைந்து செல்லும் தண்டவாளம் போன்ற பாதையில் , தடக்காமல், தளம்பாமல் சென்று அந்த நீண்ட காட்சியை படம் பிடித்ததும்,அத்தனை நடிகர்களும் தவறு விடாமல் நடித்த்தும் ஒரு சாதனைதான். எனக்கு சிறப்பாக நடிக்கக் கிடத்த ஒரு அருமையான காட்சியும் கூட.

படத்தில் (வலமிருந்து இடமாக) மோகன், நான், மகேஸ்வரி, கிகானி, செந்தூரன் (சிறுவன்)



இன்னுமொரு காட்சி - கொலராநோய் பரவி, அதனால் நோய்வாய்ப்பட்ட தோட்டத்தொழிலாளர்கள் தனி இடத்தில் வைக்கப்பட்டிருக்கும்போது அந்த லயம் தீப்பற்றி எரிகிற காட்சி. அந்தககாட்சிக்காக தனியாக் லயம் மாதிரி செய்து, அதற்குள் நடிகர்கள் சிலருடன், அந்த்த் தோட்டத்துள் உள்ள பிள்ளைகள் சிலரையும் வைத்து படம் பிடிக்க ஏற்பாடு. தீவைக்க முன்னர் இயக்குனர் முன் ஜக்கிரதையாக காட்சி அமைப்பை பார்த்தபொழுது, காட்சி அமைப்பாளர், நன்றாக எரியவேண்டுமென்பதற்காக, அங்கங்கே மண்ணெண்ணெய் தோய்த்த துணிகளையும் வைத்திருப்பதையும் பார்த்து திடுக்கிட்டுப் போய் விட்டார். அவற்றையெல்லம் அகற்றிவிட்டு தீ வைததபோதும் கொழுந்துவிட்டு சுவாலையுடன் எரிந்தது. இயக்குனர் கவனிக்காமல் தீ வைத்திருந்தால்... நினைக்கவே பயமாக இருக்கிறது.

இதே காட்சி படமாக்கப்பட்டபோது, சுவையான சம்பவம் ஒன்றும் நடந்தது. கதையின்படி எனது மகளும் (கிகானி) அதாற்குள் அகப்பட்டுவிட நான் அவளை காப்பாற்ர வெண்டும். அந்த நேர பரபரப்பில் நான் எரியும் தீக்குள் ஒடிப்போய், கிகானியைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து பாரந்தாங்காமல் இருவருவருமாக விழுந்துவிட்டோம். பாவம் அந்த நடிகைக்கு பலத்த அடி.

அத்தோடு நான் விடவில்லை. மீண்டும் எழுந்து லயத்துக்குள் ஓடி, ஏறக்குறைய 250 இறாத்தல் எடையுள்ள நடிகர் கந்தையாவை அலாக்காக தூக்கிக் கொண்டு வந்து விட்டேன். இந்தமுறை விழ்வில்லை. அவரை எப்படித் தூக்கினேன் என்று எல்லோரும் ஆச்ச்ர்யப்பட்டர்கள். கூடவே விழுந்துவிழுந்து சிரித்தார்கள்.

காலியில் உள்ள கோட்டையின் உள்ளே நடந்த படப்பிடிப்பும் சுவாரஸ்யமானதுதான். உள்ளே அது ஒரு தனி நகரம்தான். கடைகள், தங்குவிடுதிகள், தபால் கந்தோர் என்று சகல் வசதிகளும் இருந்தன. ஒல்லாந்தர் காலத்து தேவாலயத்திலும், அண்மித்த பகுதிகளிலும், கோட்டை சுவர்களிலும் (ஆமாம்..சுவர்களின் மேலே தான்)படப்பிடிப்பு நடந்தது.

தென்னிந்திய தமிழ் தொழிலாளர்கள் வந்து படகுகளில் இறங்கும் காட்சி காலிக் கடற்கரையில் படமானது.

படப்பிடிப்பு முடிந்து 'டப்பிங்' முடிந்த காலத்தில் கனடா வருவதற்கான விசா கிடைத்தது. அதனால் படத்தை முழுமையாக பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

கொழும்பில் மெஜெஸ்டிக் திரையரங்கில் (1997) திரையிட்டார்கள். பத்திரிகை விளம்பரத்தில் எங்கள் பெயர்கள் எதுவுமே இல்லை.


Blendings பற்றிய ஆங்கில விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்


20வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞசல்ஸ் லோங்க் பீச் திரைப்பட விழாவிலும் காண்பிக்கப்பட்டது. இலங்கை விமர்சகர்கள் அமைப்பின் 1996ம் ஆண்டு சிறப்பு நடுவர் விருது பெற்றது.

Thursday, November 11, 2010

5 - ஷர்மிளாவின் இதயராகம் - முதல் இலங்கைத் தமிழ் வர்ணத்திரைப்படம்


பேராதனை ஜுனைதீன் இலங்கைதமிழ் சினிமாத் துறையோடு நீண்டகாலத் தொடர்பு உடையவர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவர் என்பதோடு, ஆங்கிலப்படத்தில் உதவியாளராக பணியாற்றியவரும் கூட.






இவரது மனைவி ஜெக்கியா ஜுனைதீன் "சிந்தாமணி' பத்திரிகையில் தொடராக எழுதிய "ஷர்மிளாவின் இதயராகம்" என்ற தொடர்கதை வாசகர்களிடையே மிகுந்த வரவ்ற்பைப் பெற்றது. இதையே திரைப்படமாகத் தயாரித்தால் என்னவென்று எண்ணம் ஜுனைதீனுக்கு வந்தது. அதுவும் வர்ணப்படமாக தயாரிக்க நினைத்தார்.

கதாநாயகனாக அந்நாட்களில் சிங்களப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லீம் நடிகரை தெரிவு செய்தார்கள். அவரது திரையுலகப் பெயர் சஷி விஜேந்திரா. அவருக்கு ஜோடியாக காமினி பொன்சேகா போன்ற பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வீணா ஜெயக்கொடி என்ற சிங்கள நடிகையை ந்டிக்க வைத்தார்கள்.

ஜுனைதீனுக்கு கலையுலகில் நிரைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தன்னுடைய படத்தில் சந்தர்ப்பம் கொடுக்கவேண்டுமென்ற ஆசை அவருக்கு இருந்தது. இதனால் கதையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்து, பலரையும் சேர்த்துக் கொண்டார்.

வத்தளை அண்டிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. அரசாங்க ஸ்டூடியோவான 'சரசவிய" விலும் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

எஸ்.ராம்தாஸ் ,விஸ்வநாதராஜா,கே.ஏ.ஜவாஹர்,எம்.எம்.ஏ.லத்தீப், கலைச்செல்வன், உதயகுமார், மோகன் குமார், ஜோபு நசீர், ராஜம், ரஞ்சனி ஆகியோருடன் நானும் நடித்தேன்.

படப்பிடிப்பும் நீண்டுகொண்டே போனது. போதாதற்கு, வர்ணத்திரைப்படம் என்பதினால படச்சுருளுக்கான செலவும் அதிகம். ஒரு காட்சியை இரண்டு, மூன்று தடவை எடுக்க நேர்ந்தால் இரட்டிப்புச்செலவு. ஒரு வசதியற்ற கலைஞனால் எவ்வளவுதான் தாக்குப் பிடிக்க முடியும்.

1989ல் தயாரித்து முடிக்கப்பட்ட இந்தத்திரைப்படம் 4 வருடங்களின் பின்னரே திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தின் "டப்பிங்" நடந்த வேளையில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. எனக்கு ஒரு மேடை நடிகர் குரல் கொடுத்திருந்தார். வானொலி நடிகனாக குரலாலேயெ பிரசித்திபெற்ற எனக்கு, வேறு ஒருவர் குரல் கொடுக்க நேர்ந்தது பற்றி பத்திரிகைகளில் குறையாக எழுதியிருந்தார்கள்.

ஆரம்பத்திலேயே சண்டைகாட்சிகளுடந்தான் திரைப்படம் ஆரம்பித்தது. அதில் எனது பங்கு முக்கியமானதாக இருந்தது. வேகமான மோட்டார் சைக்கிள் ஓட்டம், தொங்கிப் பாய்தல் என்றெல்லம் சாகசங்கள் செய்தேன். நாடு போற்ற வாழ்க, அவள் ஒரு ஜீவநதி படங்களைப் போலவே வில்லத்தனமான பாத்திரம்தான் தந்தார்கள்.

பேராதனை ஜுனைதீன் திரைக்கதை வசனம் எழுதியதோடு சில பாடல்களையும் எழுதினார். மற்ற பாடல்களை விஸ்வநாதராஜா, புசல்லாவ இஸ்மாலிகா ஆகியோர் எழுதினார்கள். சரத் தசநாயாக்க இசையமைத்த இந்தப் பாடல்களை முத்தழகு, கலாவதி, எஸ்.வி.ஆர். கணபதிப்பிள்ளை, விஸ்வநாதராஜா ஆகியோர் பாடினார்கள். சிங்கள திரைப்பட இயக்குனரான சுனில் சோம பீரிஸ் படத்தை இயக்க, ஜெ.ஜே.யோகராஜா ஒளிப்பதிவு செய்தார்.

24.9.1993ல் கொழும்பு, கட்டுகஸ்தோட்டை, நுவரேலியா ஆகிய மூன்று இடங்களில் முதலில் திரையிடப்பட்டது.

Saturday, November 6, 2010

4 - நாடு போற்ற வாழ்க - வி.பி.கணேசன் படம்


தென்னிந்திய அரசியல்வாதிகள் பலர் சினிமாவிலிருந்து தான் அரசியலுக்கு வந்தவர்கள். அவர்கள் சினிமா நடிகர்களக இருந்தபோழுது சம்பாதித்துக்கொண்ட செல்வாக்கும், வருவாயும் துணையாக இருக்க, அரசியலில் குதித்து, ரசிகர் படையையே பின்னர், அரசியல் தொண்டர்களாக உருமாற்றுவது தெரிந்த விஷயம்தானே.

இதற்கு எதிர்மாறாக இலங்கையில் ஒரு அரசியல்வாதிக்கு, சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. வி.பி. கணேசன் மலையக தொழிற்சங்கமான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக இருந்தவர். அவர் சினிமாத்துறையில் காலடி வைத்து, தானே கதாநாயகனாக நடித்து மூன்று திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டார். இலங்கையில் மூன்று தமிழ்ப் படங்களை தயாரித்தவர் அவர் ஒருவரே.

அவரது முதல்படமான 'புதியகாற்று" மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதேபோல "நான் உங்கள் தோழனும்' தென்னிந்திய பாணியில் அமைந்து வெற்றி கண்டது. அவரிடம் ஒரு வழக்கம் இருந்தது. தான் கதாநாயகணாக் நடித்தாலும், தன்னுடன் சமமான (அல்லது சற்றுக் குறைவான) பாத்திரத்தில் இன்னுமொரு இளம் நடிகரை அறிமுகப்படுத்துவார். புதியகாற்று திரைப்படத்தில் டீன்குமார் நடித்தார். அடுத்தபடமான 'நான் உங்கள் தோழ்னில்' டீன்குமாருக்குப் பதிலாக. அரிதாஸ் என்ற யாழ்ப்பாண நாடக நடிகர் நடித்தார். மூன்றவது படத்தின் நடிகர் தேர்வு நடைபெற்றபோது, நான் நடித்த "வாடைக்காற்று' வெளியாகி, எனக்கு நல்ல பெயரும் கிடைத்திருந்தது.

எனவே "நாடு போற்ற் வாழ்க' திரைப்படத்தில், தனக்கு இணையான 'விஸ்வநாத்' என்ற பாத்திரத்தில் என்னை நடிக்கவைக்க தீர்மானித்தார். எனக்கு அழைப்பு வந்தது. ஹப்புத்தளை, பண்டாரவளை போன்ற மலயக குளிர் பிர்தேசங்களில் படப்பிடிப்பு. புறப்படும்போதுதான் ஒரேகதையை தமிழிலும், சிங்களத்திலும் தயாரிக்கப்போவதாகவும், இரண்டு படங்களையும் சிங்கள திரைப்பட இயக்குனர் யசபாலித்த நாணயக்கார இயக்கப்போவதாகவும் சொன்னார்கள்.

இயக்குனர் யசபாலித்த நாணயக்காரா

இவர் இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் சகோதரர். சிங்கள சினிமாவின் பல வெற்றிபெற்ற படங்களை இயக்கியவர். ஏற்கெனவே ஒரே கதைகயைக் கொண்ட"கீதிகா" என்ற சிங்களப்படத்தையும், "அநுராகம்" என்ற் தமிழ் படத்தையும் ஒன்றாக இயக்கிய அனுபவம் அவருக்குண்டு. கதை ஒன்று. நடிகர்கள் வேறுவேறு. இதேபோல தமிழ் "நாடுபொற்ற வாழ்க"வில் வி.பி.கணேசனும், நானும் நடித்த பாத்திரங்களில் சிங்களத் திரைப் பட்மான "அஞ்சானா" வில் புகழ்பெற்ற சிங்கள் நடிக்ர்களான விஜய குமாரதுங்கவும், றொபின் பெர்னாண்டோவும் நடித்தார்கள். கதாநாயகிகள் என்ற வகையில் இரண்டு மொழிகளிலும் கீதா குமாரசிங்க, சுவர்ணா மல்லவாராச்சி இருவருமே நடித்தார்கள்.



சுவர்ணா

நான் பார்த்த பல சிங்கள 'கலை'ப் படங்களில் முக்கியபாத்திரங்களில் நடித்த சுவர்ணா எனது ஜோடியாக நடித்தது சந்தோசமே. அவரோடு நடிப்பது சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.
ஒரு காட்சியில் அவரது கன்னத்தில் அறைவது போல நடிக்கவேண்டும். நான் நிஜமாகவே அறைந்து விட்டேன். அவரது காதுத்தோடு பறந்துவிட்டது. அத்தோடு அவ்ர் கண்கள் கலங்கி விட்டன. இருந்தாலும் கோபித்துக் கொள்ளாமல் நடித்து முடித்தார். இதற்கு பிறகும் எங்கள் காதல்காட்சிகள் நெருக்கமாக அமைந்தன என்பதுதான் ஆச்சர்யம்.

இன்னும் ஒரு மறக்கமுடியாத சம்பவம், நான் மலையை சுற்றி வளந்து, வளைந்து போகும் பாதையில், படு வேகமாக மோட்டார் சைக்கிள் ஓடியது. எதிர்எதிரே வாகனங்கள் வந்தால் விலகிப்போக முடியாத, அகலம் குறைந்த பாதை. சற்று விலகினாலும், அதல பாதாளத்தில் விழுந்து விட வேண்டிவரும். இந்தப் பாதையில், கணேசன் HONDA வில் ஓடிக்கொண்டிருக்க, நான் அவ்ரை புதிய KAWASAKKI யில் துரத்தி செல்கிறேன்.

மலை விளிம்பில் நாங்கள் வளந்து, வளைந்து ஓடுவதை. மலையின் ஒரு வளைவில் நின்று படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகில் சென்று ஓட்டத்தை முடிக்கவேண்டும். அவ்வேளையில் எனது மோடார் சைக்கிள் பாதையை விட்டு விலகி, விளிம்பு நோக்கிச் சென்றது. அவ்வளவுதான்..எனது முடிவு இதுதான் என்று நான் நினைக்க முன்னரே, கமராக்காரருக்கு பின்னால் நின்ற நடிகர் றொபின் பேர்னாண்டோ (இவர்தான் எனது பாத்திரத்தை சிங்கள்ப் படத்தில் நடித்தவர்) நேராக வந்து, சரிந்துகொண்டுபோகும் மோட்டர்சைகிளை கவ்விப் பிடித்து என்னை காப்பாற்றினர்.- அந்தவார 'மித்திரன்' பத்திரிகை ஒரு செய்தி வந்தது. "படப்பிடிப்பில் திகில் சம்பவம் - நடிகர் மயிரிழையில் உயிர் தப்பினார்"

ப்னிமூட்டம் மூடிய லிப்டன் சீற்(Lipton;s Seat)

படத்தின் உச்சக்கட்டம் - ஹப்புததளையில் உள்ள தம்பரென்ன எஸ்டேட்டில் ஒரு மலை உச்சியில் Lipton;s Seat என்ற இடம் இருக்கிறது. அங்கிருந்துதான் சேர்.தோமஸ் லிப்டன் (ஆமாம்- லிப்டன் தேயில் என்று அவர் பெயர்தான் இடப்பட்டது) தனது எஸ்டேட் முழுவதையுமே பார்ப்பாராம். சிறப்பு என்னவென்றால் பனிமூட்டம், முகில் கூட்டம் மறைக்காத ஒருநாளில் தெற்குமாகாணம், கிழக்கு மாகாணம் எல்லைகளான கடல் கூட அங்கிருந்து தெரியும். இந்த மலை உச்சியில்தான் எனக்கும் வி.பி.கணேசனுக்கும் இறுதி சண்டை நிகழ்கிறது. சண்டையின் முடிவில் மலையின் விளிம்பை பிடித்துக்கொண்டு நான் தொங்க கணேச்ன் மனம் மாறி என்னை காப்பாற்றுவதாக காட்சி. கீழே எறும்புகள் போல மனிதர்கள் தெரிகிறார்கள். காட்சி எடுத்து முடிந்ததும்தான் உயிர் எனக்கு திருமப வந்தது.
உச்சியில் இருந்து பார்க்கும்போது..


"நாடு போற்ற வாழ்க" படத்தில் இடம்பெற்ற பாடல்களை ஈழ்த்து இரத்தினம் இய்ற்ற சரத் தசநாயக்க இசை அமைத்தார். முத்தழ்கு, கலாவதி, சுஜாதா,, சந்திரிகா, சுண்டிக்குளி பாலச்சந்திரன் ஆகியோர் பாடினார்கள். ஜெ.ஜே.யோகராஜா தான் படப்ப்டிப்பாளர்.

31.7.1981ல் ஆறு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.